26. அருள்மிகு பரிமள ரங்கநாதன் கோயில்
மூலவர் பரிமள ரங்கநாதன்
தாயார் பரிமள ரங்கநாயகி
திருக்கோலம் கிடந்த திருக்கோலம் (வீரசயனம்), கிழக்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் இந்து புஷ்கரணி
விமானம் வேத சக்ர விமானம்
மங்களாசாசனம் திருமங்கையாழ்வார்
இருப்பிடம் திருஇந்தளூர், தமிழ்நாடு
வழிகாட்டி மயிலாடுதுறையிலேயே இத்தலம் அமைந்துள்ளது. நகரப் பேருந்து வசதி உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து கல்லணை - பூம்புகார் சாலையில் சுமார் 3 கி.மீ. தொலைவு சென்று வலதுபுறம் திரும்பும் சிவன் கோயில் தெருவில் திரும்பி மீண்டும் வலதுபுறம் திரும்பினால் இக்கோயிலை அடையலாம். இரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரம்.
தலச்சிறப்பு

Indhalur Gopuram Indhalur Moolavarஒரு சமயம் சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தைப் போக்குவதற்கு இத்தலத்தில் பள்ளிக் கொண்டிருக்கும் பெருமாளை வந்து வழிபட்டான். பகவான் அவனது பிரார்த்தனைக்கு இரங்கி சாபவிமோசனம் அளித்தார். அதனால் இத்தலம் 'இந்தளூர்' என்று பெயர் பெற்றது. 'இந்து' என்ற பெயருக்கு 'சந்திரன்' என்று பொருள்.

முற்காலத்தில் இந்த இடம் சுகந்தவனமாக இருந்ததால் மூலவர் 'பரிமள ரங்கநாதன்' என்று அழைக்கப்படுகின்றார். மூலவர் கிடந்த திருக்கோலம், வீரசயனம், நான்கு புஜங்கள், கிழக்கே திருமுக மண்டலத்துடன், தலைமாட்டில் காவிரித் தாயாரும், கால்மாட்டில் கங்கைத் தாயாரும் அமர்ந்திருக்க ஸேவை சாதிக்கின்றார். தாயார் பரிமள 'ரங்கநாயகி' என்றும் 'புண்டரீகவல்லி' என்றும் வணங்கப்படுகின்றனர். சந்திரனுக்கு பகவான் பிரத்யக்ஷம்.

குழந்தைப் பேறு வேண்டி பிரார்த்தனை செய்பவர்களுக்கு உகந்த ஸ்தலம். மூலவருக்கு அருகில் உள்ள சந்தான கோபாலனை மானசீகமாக தொட்டு வணங்கினால் பிரார்த்தித்துக் கொண்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது நம்பிக்கை.

ஐப்பசி மாதம், காவிரியும் சமுத்திரமும் சங்கமமாகும் இடத்தில் நடைபெறும் 'முடவன் முழுக்கு' என்னும் கடைமுக ஸ்நானம் பிரசித்தி பெற்றது.

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் இந்தளூர் பெருமாள் மீது கீர்த்தனைகள் இயற்றியுள்ளார்.

திருமங்கையாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இக்கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com